Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

இனி ஒரு வைகறை

கி.பி. அரவிந்தன்

---------------------------------------------------------

இனி ஒரு வைகறை

கி.பி. அரவிந்தன்

உள்ளுறை

1. இனி ...... 23.7.1990

2. இனி வரும் காலை .... 29.6.1990

3. வானத்தை வெறித்திரு ..... 21.6.1990

4. ஒளி தெறிக்கும் காலம் .... 10.2.1989

5. நம்பிக்கையுடன் எழு .... 15.11.1986

6. உயிர்ப்பு .... 27.7.1987

7. புள்ளிகள் .... 1.9.1987

8. கடல்களுக்கப்பால் பிரிந்திருப்பது .... 17.9.1986

9. உங்கள் நேசத்துடன்

10. காலம் கரைகிறது .... 15.6.1989

11. ஆயினும் என்ன? .... 17.10.1989

12. வெண்ணாற்றங்கரையில்

13. இரவு வருகிறது .... 5.8.1990

14. சிலுவைகள் .... 22.6.1990

15. மூச்சு முட்டுகிறது .... 22.8.1990

16. பிரான்ஸ் .... 20.5.1991

---------

---------------------------------------------------

1. இனி

இவை

எனது

குறிப்பேடுகளிலிருந்து

பெயர்த்தெடுக்கப்பட்டவை.

எழுத்துக்களினால் ஆன

இவ்வுணர்வுகள்

கவிதைகளாயிருப்பின்

போராளியாயிருந்த ஒருவன்

கவிஞனாகிறான்

ஒரு நொடி;

ஒரு கணம்;

ஓரிமைப் பொழுது.

கண் முடித்திறப்பதற்குள்

அது நிகழ்ந்தது.

குத்தென

சாய்ந்து சரிந்து

சட்டென

மேலெழ நிமிர்கையில்

எச்சமிட்டது.

"யார் தலையில் விடியுமோ?"

கண்களை உரசும்

சூரியத் தெறிப்பு;

முகிலுக்குள் மறையும்

உயிர்கொத்திப் பருந்து.

மனிதம் உறைந்து

உயிர்த்தது.

"குடிமனைக்குள் போடுறானே

கோதாரியில் போவான்

கடவுளே....கண்ணில்லையா?"

மண்ணை வாரி

வார்த்தைகளை விசிறி

காற்றைச் சபித்து.....

எங்கே

என் வீடு?

என் முற்றம்?

சின்னக் குருவிகள்

நம் வியர்வைக் குழையலில்

தொட்டிழைத்த கூடு;

தொப்புள் கொடியில்

பூத்த சிறுமலர்.

தத்தித் தத்தித்

தளிர்நடை நடந்து

விரித்த கனவுகளின் முற்றம்;

முற்றத்து விளிம்பில்,

மாலைக் காற்றுக்கு

மணம் சேர்த்த மல்லிகை;

காலை இளம் மலர்வுடன்

வணக்கம் சொல்லும் செம்பரத்தை ;

குலை தள்ளிக் கிடந்த

பச்சை வாழை;

எல்லாமே எல்லாமே

எங்குற்றது.....?

என்னவாயிற்று.....?

குண்டுகள்

சப்பித் தின்று

துப்பிய எச்சத்துள்

பால்மாப் பேணி

அலுமினியக் கோப்பை,

குழந்தையின் சூப்பி

எப்படித் தேட?

இந்தியச் சிப்பாயே

உனது நாட்களில்

என்னவாய் முனிந்தாய்?

"ஆளுக்கொரு வீடு

வீட்டுக்கொரு கிணறு

கிணற்றுக்குள் தண்ணீர்...."

வெந்து அவிந்து

பொசுங்கிக் கருகி

உடைந்து நொறுங்கி

சிதைந்து சிதிலமாய்ச்

சிதறிக் கிடக்குது.

எனக்கென்றொரு

வீடு;

இனி,

அதுவும் இல்லையென்றாயிற்று

இனி.......

---------------------

--------------------------------------------------------------------------------

2. இனி வரும் காலை

காலைப் பொழுது

வதையுற்றது.

உயர உயர

வட்டமிட்டும்,

கரணமிட்டுத்

தாழவந்தும்

தீயை உமிழ்ந்தன

இயந்திரப் பருந்துகள்....

இரும்புப் பறவைகள்....

காற்று வெடிக்க

நிலம் அதிரும்.

குருதி கலைந்து

சில்லிடும் நெஞ்சக்கூடு.

உடலமெங்கும்

மின்னணுப் பரம்பரம்.

கதவுகள் திறக்க,

சிதறிச் சிதைந்தவை

கண்ணாடிகள் மட்டுமா?

பொதி சுமக்க

மறுத்த மாடென,

ஒலியின் மாகனத்துடன்

காற்று.

திசைகளைத் தின்ற

மயக்கம்;

மேகமூட்டத்துடன்

வானம்;

புகை படிந்த

பகல்;

செவிப் பறையைக்

கிழிக்கும்

இரும்பு யந்திரம்.

மரங்கள் தலைவிரித்தாட

ஊளையிடும் இலைகள்.

குந்தியிருக்க இடமுமின்றி

பரிதவிக்கும் பறவைகள்.

மரத்துண்டமடுக்கி

மணம் மூட்டை

ஏற்றுவர் மனிதர்.

இனி வரும்

காலை......

--------------------------------------------------------------------------------

3. வானத்தை வெறித்திரு

பொழுது பட்டபின்னாயினும்

வீடு திரும்பலாம்.

இருள் வீட்டினுள்ளாயினும்

விளக்கேற்றலாம்.

கஞ்சி கால்வயிறாயினும்

மூலைக்குள் முடங்கலாம்.

குடில் உள்ளதென்றாயினும்

திருப்தியுறலாம்....

இவை தன்னும்

மிஞ்சாமற் போய்விடுமோ?

விளக்கணைத்தல்

மண்ணுட் புதைதல்,

பாழ் வெளியை வெறித்தல்,

சிலுவைக் குறியினுள்

அடைக்கலமாதல்

நிகழ்வுகளாயிற்று.....

நகரம்

இறந்துபடுமோ?

மரங்கொடி பச்சைகள்

பொசுங்கிய நாற்றம்,

ஈனக்குரலில் தவிப்பு,

நாய்களின் சிணுங்கல்.

மூச்சிரைக்க நுரைதள்ள

சுருக்குத் தடத்திற்குத்

தப்பித்தோடுகிறது நாம்பன்.....

மழைநீர் வடியும் மதகு,

மொக்குகள் கிளைத்த மரம்,

பள்ளிக்கூடம்

தேவர்களின் ஆலயம்

இங்கெல்லாம்

சிதறிய கனவுகளின் குவியல்.

ஒருமையின் கரைவில்

மனித நிரம்பல்.

மனம் பலமுறும்.

கைப்பிடிக்குள் உயிர்

நழுவியும் போகலாம்,

அதுவாயினும் மிஞ்சலாம்,

வானத்தை வெறித்திரு.........

------------------

--------------------------------------------------------------------------------

4. ஒளி தெறிக்கும் காலம்

மெளனித்துக் கிடந்தது

மலைப்பூதம்.

கவிந்திருந்தது

பனிமூட்டம்.

படியவாரிய மயிர்க்கால்களாய்

தேயிலை.

இரத்தம் பச்சையாகும்.

கருகிய கொழுந்துகள்

'சிலோன் ரீ' என

ஆவியுறுகையில்

இரத்தமாயிருக்கும்

ரசவாதம் நிகழும்.

சிலிர்த்து நிற்கும்

சவுக்கை முருங்கை

துரைத்தனங்களுக்குச்

சலாமிடும் துப்பாக்கி.

கண்ணீரா வியர்வையா

கசிந்து வழியும் நீர்?

மொய்த்திருக்கும் வெட்டுக்கிளிகள்

கொழுந்துகள் கிள்ளும்.

கூடை ததும்பும்

தலைமுறைக் கனவுகள்,

முதுகிளை அழுத்தும்

நூற்றாண்டுக் கனம்.

குறிஞ்சி நிலப்பூக்கள்

கண்களில் வண்ணங்கள்.

பூவிதழிலெல்லாம்

கோர்த்திருக்கும் நீர்த்துளிகள்.

மலையின் நெட்டுயிர்ப்பு.

விடியும் வரை ஆடும்

காமன் கூத்து.

தமிழின் பாடல்.

சோமபானத்தில்

நிஜங்கள் மிதக்கும்

சோகம் தொலைக்கும் இரவு,

கவிழ்ந்து கிடக்கும்.

ஒளிதெறிக்கும் காலம்.....

---------------------

--------------------------------------------------------------------------------

5. நம்பிக்கையுடன் எழு

மலைகளில் உரமாய்த்

தேநீரில் இரத்தமாய்

முகமற்றுப் போனோரே

கவனித்தீர்களா?

பனிப் படலங்களை

ஊடுருவும்

எக்காள ஒலிகள்.

சிங்கத்தின் வாள்

இனி

உடைபடக்கூடும்.

அதோ.....

வயல்வெளி எங்கும்

தலை நிமிரும் நெற்பயிர்கள்.

வசந்தன் கூத்தின்

நாயகர்கள் ஆட்டம்.

இவனோ நண்பன்.

பனைகள் மறைக்கும்

செம்மண் பரப்பு.

பனங்காட்டுச் சலசலப்பு.

ஓலைகள் உராய்வினில்

அக்கினிக் குஞ்சுகள்.

அவற்றுக்கும் அப்பால்....

அலைகளின் சீற்றம்,

முரல்களின் துள்ளல்.

அம்பாப் பாடல்களில்

சோகம் தொலைக்கும்

ஏலேலோப் பாடகர்கள்.

நண்பர்கள்...தோழர்கள்...

"ஆறுகள் முன்னோக்கியே

பாய்கின்றன"

அப்புறமென்ன!

அடர்ந்த மலைகளின்

இருட்டினில் இருந்து

தேநீர் கரங்களில்

விலங்குகள் கழற்று.

பனி மலைகளின்

உச்சிகள் பிளந்து

கலவியைத் தொடங்கு,

சக்தியை உமிழ்,

உழுத்த மாளிகையின்

இடுக்குகள் எங்கணும்

ஆலம்விதைகள்.

நம்பிக்கையுடன்

எழு....

------------------

--------------------------------------------------------------------------------

6. உயிர்ப்பு

உயிர்த்திருக்கின்றேன்.

மணற் புயலொன்றில்

அள்ளுண்டபோது

கருகத் தொடங்கினேன்

இமயத்திலிருந்து

தென்றலெனப்

புறப்பட்டபோதும்

இந்துமாக் கடலில்

புயலுருக்கொண்டது

காலணி அணிந்த

பச்சைப் பிசாசெனப்

புயலிருந்தது

தனி மரங்களாய்

என்னவர் நின்றனர்

புயலின் சூழலில்

வேருடன் மரங்கள்

துண்டாடப்பட்ட நிலம்

துண்டணிந்த தோள்கள்

துண்டுபட்டிருந்தனர் மக்கள்.

எக்காளமிட்டது புயல்

காய்கள் கனிகள்

சிதறின

கொடுங்குறி ஒன்று

அறிவிக்கப்படாமலே

எம் தலையில் விடிந்தது.

புயல் காப்பு மையங்களை

அமைக்க மறந்ததால்

மரத்திலிருந்து

உதிர்ந்த நானும்

கருகத் தொடங்கினேன்.

என் உயிர்ப்பை இன்னும்

நெருப்புத் தீண்டவில்லை.

உயிர்ப்பு....

--------------------------------------------------------------------------------

7. புள்ளிகள்

கண்களின் வீச்சில்

ஒரு புள்ளியில்

சந்திக்கும் வேளை

காதல் அரும்புகிறது.

அது கணங்கள் தோறும்

நிகழ்கின்றது.

புள்ளிகள் மாறுகையில்

காதலும் மாறகிறது.

காதலோ

அது மறைவதில்லை.

எனது கண்கள்

வீச்சைப் பாய்ச்குகின்றன,

புள்ளிகள் சந்திக்காத

நெடுந்தூரப் பயணம்.

முகத்தைச் சுருக்கி

நிராகரித்தும்,

கண்களால் எரித்துக்

காயமாக்கியும்,

நாவினால் சுட்டு

அவமானமாக்கியும்,

ஒரு புழுவென என்னை

மதியாமலும்.....

புள்ளிகள் சென்றன.

பயணத்தின் தூரம்

அதிகம் போலும்.

புள்ளிகள் சுருங்கி

சூனியமாகும்.

ஏகாந்தமெங்கும்

முகமறியாதவர்களுடன்

காதல் தொடர்கிறது...

புள்ளிகள்.

----------------

--------------------------------------------------------------------------------

8. கடல்களுக்கப்பால் பிரிந்திருப்பது

கடல்களுக்கு அப்பால்

பிரிந்திருந்தேன்.

தேயிலைச் செடியினில்

தெறித்த கண்ணீர்

என்மீதும் பட்டது.

நெற்கதிர்க் கட்டினில்

படிந்த குருதியின்

வாடையை நுகர்ந்தேன்.

கடல்நுரை தள்ளிய

சிதைந்த உடல்கள்

என் கால்களில் இடறின.

காற்று சுமந்த

பெருமூச்சின் வெப்பம்

என்னைச் சுட்டது.

நெகிழ்ந்தேன்;

கரைந்தேன்.

இனியவள்

உனையும் நினைத்திருந்தேன்.

வெண்மணல் துகள்களில்

பாதங்கள் பதிகையில்

மாலைக் காற்று,

மெல்லென சிலிர்த்தேன்.

எனது ஊர்....

தார்மீக எதிரிகள்

முடங்கி இருந்தனர்.

காவலரண் கட்டிப்

'பொடியன்கள்' விழித்திருந்தனர்.

கனத்த இருட்டில்

இறுக்கிய போர்வையுள்

என்னரும் மக்கள்

துயின்றிருந்தனர்.

தொலைவினில் எங்கோ

கண்ணீர்

தெறித்ததாம்.

குருதி வடிவதாயும்

யாரோ

சொல்லிச் சென்றனர்.

சிதைத்த உடல்கள்

நிழற்படங்களில்

காட்சிக்கிருந்தது.

தீண்டும் துன்பம்

ஏதுமில்லை.

கொதித்து கிடந்த

இரத்த நாளங்கள்

சுருங்கத் தொடங்கின.

இனியவள்

உனது இதழினை

சுவைக்கையில்

வாயின் நாற்றம்

நாசியில் ஊர்ந்தது.

கடல்களுக்கப்பால்

பிரிந்திருப்பது.....

-------------

--------------------------------------------------------------------------------

9. உங்கள் நேசத்துடன்

வாழ்வதன் சவாலை

எதிர்கொள்ளும்

அணிவகுப்பில்,

நேசம் மிகுந்த

உங்களை இழந்தோம்.

தோழர்களே, தோழர்களே,

தேசமெனும் வார்த்தைக்கு

கனம் ஏற்றினீர்கள்....

செயல் என்பதனை

வீரியமாக்கினீர்கள்....

உங்களால்

நேசம் வனப்புற்றது.

மரணம் மகிமையுற்றது.

நீங்கள்,

மிடுக்குடன் திரண்ட

அடம்பன் கொடிகள்.

மலைகளையே சுமந்தவர்கள்.

உடைத்தவர்கள்.

ஓலைக் குடிசைகளின்

துவாரங்கள் தோறும்

இறங்கும் ஒளிக்கதிர்கள்.

'மோப்பக் குழையும்'

அனிச்சமலர்கள்.

எங்கெங்காயினும்

இலங்கைத் தமிழரென

எமது நெஞ்சு நிமிர்கையில்

பெருமிதமென

நீவிர் ஒளிர்வீர்.

உங்களில் தெறித்த

பொறிகள்

பெருந் தீயென

மூண்டொ¢கிறது.

எரியும்....எரியும்....

அது இன்னமும் எரியும்...

எதிர் கொள்ளும்

அணிவகுப்பில்

உங்கள் நேசத்துடன்....

-----------

--------------------------------------------------------------------------------

10. காலம் கரைகிறது

காலம் கரைகின்றது.

நீ இன்னமும்

மணம் பரப்புகின்றாய்.

வண்ணக் குழையலென

காட்சிப் புலன்கள்.

வானவில்லின் நிறம் பிரிக்கும்

அணுத்துணிக்கைகள்.

நண்பா,

உந்தன் நிறம் ஏது?

சுடர்கின்றாய்.

மரவள்ளித் தோட்டத்தில் நீ

வீழ்ந்து கிடந்தாய்.

செம்மண் பாத்திக்கு

நீர் பாய்ந்து கொண்டிருந்தது.

தோட்டவெளிக்கு

எல்லையிட்டிருக்கும்

பனைகளின் பின்னே,

ஊரின் புறத்திருந்து

விழிகள்

உன்னை மொய்த்திருந்தன.

துப்பாக்கிகளின்

முற்றுகை உடைத்து

மாலைச் சூரியன்

உன்னைத் தொடுகின்றார்கள்.

சயனைட் குப்பிக்கு

உன்னை ஒப்படைத்துவிட்டு

சிரிக்கின்றாய்.

மிளகாய், புகையிலை

வாழையில் எல்லாம்

உந்தன் சிரிப்பலை

படிகின்றது.

முதல் வித்து நீ.

முன்னறிவித்தவன் நீ...

சாத்வீகப் பாதையில்

சந்தி பிரித்தாய்.

கால வெளியில்

சுவடுகள் பதித்தாய்.

காலக் கரையிலும்

உந்தன் சுவடுகள்...

நண்பா,

இப்படியும் காலம் வந்தது.

கறையான் புற்றில்

கருநாகங்கள்.

அசோகச் சக்கர

நாற்காலி அமர்ந்து

தேசபா¢பாலனம்.

மரவள்ளிச் செடிகளும்

கண்ணீர் உகுத்தன.

அமிலக் கரைசலில்

உந்தன் சுவடுகள்

எரித்தனர்.

முள்முடிகளை மக்கள்

தலைகளில்

அறைந்தனர்.

துளிர்களைக் கிள்ளியும்

மலர்களைப் பிய்த்தும்

இரத்த நெடியினைத்

துய்த்து நுகர்ந்தனர்.

நண்பா,

நீ என்ன சொன்னாய்,

கருவிகள் கையெடு,

களைகளை அகற்று.

இவர்களோ,

வயல்களுக்குத்

தீ வைத்து,

வரப்பினில்

தானியமணிகள்

பொறுக்கினர்.

இந்தக் காலம்

அந்தகாரமானது

பேய்களும்

பேய்க்கணங்களும்

பூதங்களும் என

நர்த்தனம் புரிந்தது.

ஆயினும்,

உனது சிரிப்பின் அலைகள்

ஆழ்ந்து விரிந்து

எங்கெங்கும் பரவி

வெட்டவெட்டத்

தழைத்தது.

நண்பா,

உந்தன் இளவயதில்

உயிரை வெறுக்கவும

சயனைட் குப்பியை

உயிரெனக் கொள்ளவும்

செய் அல்லது செத்துமடியென

பிரகடனம் செய்யவும்

எவை உன்னை

உந்தியதோ

இன்னமும் அவை

அப்படியே உள்ளன.

உந்தன்.

ஒளிரும் சுவடுகளும்

எம்மெதிரே விரிகின்றன.

காலம் கரைகிறது.

------------

--------------------------------------------------------------------------------

11. ஆயினும் என்ன

அரை வட்டமாய்க்

கடலின் விரிவு.

வான்முகில் பணிந்து

கடலினுள் இறங்கும்

பார்வையின் தொலைவா?

புவியின் வளைவா?

அணையும் விளக்கு

ஒளிர்வதைப் போல,

வண்ணமாய்ச் சுடர்ந்து,

வண்ணங்கள் படைத்து

சூரிய மரணம்.

அலை எகிறும்

காலி முகத்திடல்.

காற்று வாங்கும் மனிதர்,

களவொழுகும் காதலர்கள்,

பட்டம் விடும் சிறுவர்கள்

மாறாதிருந்தது.

சிலிங்கோ ஹவுஸ்

கட்டிடக் காட்டில்

மறைந்து போயிற்று.

நட்சத்திர விடுதிகளின்

முற்றுகையில்

சுதந்திர பாராளுமன்றம்.

தீவினுள் தீவாய்

கொழும்பு மாநகரம்

இதுவோ எந்தன்

தலை நகரம்?

வண்ணங்கள் மிதக்கும்.

இயந்திர வடிவங்கள்

தெருக்களில் சறுக்கும்

மினுங்கும் குலுங்கம்

என்னையும் தின்னும்.

அவசரம், ஆரவாரம்,

முகங்களை புதுப்பிக்கும்.

தனித்த என்னில்

இருள் வந்து கவியும்.

இந்த நகரில்

இந்தத் திடலில்

எமது முன்னவர்

காயங்களாகினர்

இரத்தம் சிந்தினர்.

அவர்கள் கோரிய

நியாயங்கள் எல்லாம்

காற்றில் அலையும்

பட்டங்காளயின.

இந்த நகரின்

நெடிய தெருக்களில்

எத்தனை தடவைகள்

என்னொத்தவர்

தலைகளை இழந்தனர்,

தீயினைத் தின்றனர்.

ஆயினும் என்ன?

மீண்டும் மீண்டும்

கொழும்பு நகா¢னை

என்னவர் மொய்த்தனர்.

-------------

--------------------------------------------------------------------------------

12. வெண்ணாற்றங்கரையில்

காற்றிலும் நீரின் வாடை.

நீரிலும் ஒலியின் தாளம்.

நீராடை விலகிய மருதநிலம்

பச்சையாய் சிரித்தது.

எனக்குள் மோகம்.

மழலையின் கன்னங்களில்

வழியும் கண்ணீர்.

மெல்லென அசைந்தபடி

நீரின் ஓடை.

காவிரிக் கால்வாய்.

வெண்ணாற்றின் நுரைகள்,

படிகளில் படியும் வீடுகள்...

தூசு படர்ந்த கூரைகள்....

காரை பெயர்ந்த சுவர்கள்....

நூற்றாண்டின் பெருமூச்சு.

சாணிப்பால் கொடுத்தவர்

கசையைக் கையில் கொண்டவர்

இன்னமும்...

எக்காளத்துடனும்

நான்கு குண தளதளப்புடனும்.

குடிசையின் ஓலைக் கீற்றுகள்

முதுகினில், இடுப்பினில் தடவ,

ஊரின் புறத்தே

முகங்களில் சேறுகள் அப்பி,

காந்தித் தாத்தாவின்

'கடவுளின் குழந்தைகள்'....

ஆடைகள் உடலை மறைக்க,

பால்பேதம் கூர்மை பெறும்.

ஆடைகள் குறைத்து

நீரினில் அளைகையில்,

கணுக்காலில், பாதத்தில்

புணர்தல் அற்று

முழுமையில் குழையும்

தமிழன் மறைத்தவற்றின்

எச்சங்கள்

வெண்ணாற்றங்கரையில்.

தேவ அடியாளாய்ப்

பூத்தாள் மாதவி.

காதலன் கள்வனானான்,

குலவழக்கை ஒழித்தாள்,

மணிமேகலையைத்

துறவியாக்கினாள்,

கோவலன் கொலையுண்டான்.

கண்ணகி....

கையில் நெருப்பேந்தி

மதுரைக்குத் தீயிட்டாள்.

காவியச் சிலம்பின்

நர்த்தனம் நிகழ்ந்த

காவிரி விளைநிலம்

வெண்ணாற்றங் கரையோரம்

மணலில் என் கால் புதைய....

நந்தியைக் காவல் வைத்து

வட்டக்கல் பாரம் வைத்து

நடமிட,

கருவறை உட் சென்றவன்

படைத்தவன் மறைந்து போனான்.

ராஜ வீதியில்,

ராஜராஜன் குதிரையின்

குளம்படிகள்....

ஈழ, சிங்கள

போர்க் கைதிகளின்

காலடிகள்....

ஈழத்துணர்வு வந்திறங்கிய

காவிரிப் பூம்பட்டினம்

கடலில் மறைந்தது.

ஈழத்தின் கண்ணீர்

கடலில் கலக்கிறது;

என்னுள்

இரத்தக் கசிவு அதிகா¢த்தது.

பசுமை படர்ந்த

காவிரி மண்ணில்

முதுமை மணல் மேடுகள்

உதிர மாட்டாமல்

இறுகி இருந்தது.

ஒவ்வொரு கூரையையும்

ஆயிரம் தூண்கள்

தாங்கி நின்றன,

இடத்தை அடைத்தபடி.

மானுடம்

முடங்கிக் கிடந்தது.

இருட்டிலும்

நீர்மை படர்ந்திருந்தது.

----------------

--------------------------------------------------------------------------------

13. இரவு வருகிறது

இரவு வருகிறது

வெள்ளி முளைக்காத,

நிலவும் ஒளிராத,

தொடர் இரவு....

வெறித்த வானை

கண்கள் கொறிக்க

இருள் வெளியை

செவிப்பறை உறிஞ்சம்.

தவித்துத் தவித்துத்

தத்தளித்து

வெளிறும் முகங்களில்

தூமகேது

செட்டைகள் விரிக்கும்.

தீயின் நாவுகள்

மண்ணை நக்கும்.

அக்கினிப் பறவைகள்

இறகுகள் உதிர்க்கும்

நெருப்பு மழையில்

நகரம் நனையும்;

கரையும்,

ஒலியும் ஒளியும்

துணைவர,

வானில்

யமதூதர்களின்

உலா நிகழும்.

அணி குலைந்து அலையும்

மந்தைகளின் ஓலம்

ஆலயங்களை நிறைக்கும்.

கடவுளர்களின்

மூச்சுத் திணறும்.

சாவின் நுகத்தடியில்

பிணையல்

மின்னல் கொடிக்காலில்

உயிரின் வேர்....

இரவு வருகிறது....

----------------

--------------------------------------------------------------------------------

14. சிலுவைகள்

எத்தனை சிலுவைகளைச்

சுமப்பது?

எத்தனையாம் முறையாய்

அறைபடுவது?

அழுவாரற்று,

எடுப்பாரற்று,

புதைப்பாரற்று

வயல்களிலும்

தெருக்களிலும்

வழிநடையிலும்

நாம்

எவற்றைக் கண்டோம்?

மண்ணுடன் கலக்கும்

வாழ்வு.

உயிர்

கசிந்து, வழிந்து

பெரும் நதியில்

பயணம்.

தண்ணீர்க் கொடியில்

தாகம் தணியும்.

குருவிகள் பின்னிய

கூடுகள்,

தாயத் தாகத்தைக்

கிளறும்.

பத்தொன்பது தடவைகள்

படையெடுப்பு,

வரலாறு

எண்ணிக்கை கூறும்.

எங்கள் தோள்களில்

சிலுவைகள்.

எண்ணிக்கை

யாருக்குத் தெரியும்

அகதி என

முகத்தினில் எழுதுவர்.

கட்டிய

சேலைத் தடுப்புக்குள்

குறண்டும்

வயிறும் மானமும்

விதைத்தும்

அறுத்தும்

திமிறிடும் கரங்கள்

இரந்துண்ண

நீளும்,

அவமுற்றுத் தொய்யும்,

குடலைக் குடல் தின்னும்

ஆள் மாறி

முகம் பார்த்து

பசியாறத் தவிக்கும்.

நெஞ்சுக்குள்

ஆணிகள் இறங்கும்.

இனி வரும் நாளில்,

நம் வயிற்றின்

கனியை

நாமே புசிப்பமோ?

காலம் விதிக்குமோ?

சிலுவைகள் முறியுமோ?

சிலுவைகள்

------------

--------------------------------------------------------------------------------

15. மூச்சு முட்டுகிறது

மூச்சு முட்டுகிறது

வெப்ப இருட்டு.

எரிபற்று நிலைக்கு

ஏறிச் செல்கிறது

கண்ணின் கதகதப்பு,

சதைகளின் நெரிசலில்

வியர்வைக் கரைசல்.

முணுமுணுப்பும் விம்மலும்

பற்கடிப்பும்

பெருமூச்சுமென

உயிரின் யாசிப்பு.

ஆறடிக் குழிக்குள்

நான்.

நாங்கள்.

குழிக்கு வெளியே

அனைவரினதும் செவிகள்

சத்தத்தின் ருத்ர தாண்டவம்.

மழை வெயிலுக்கு?

வீடு

நெருப்பு மழைக்கு

கோழியின் இறக்கைக்குள்

குஞ்சுகள் ஒதுங்கும்.

வானில் வல்லூறுகள்.

குழதைகள் வீறிடுகிறது.

என்னைக் கை

தீண்டுகிறது;

மனைவி.

அம்மா அனுங்குகிறார்.

ஐயாவின் இருமலில்

உயிரிக் குலை அறுகிறது.

இது என்ன வாதை!

வீட்டுக்கு வீடு

புதை குழிகள்.

உயிர்ச் சடலங்கள்.

சவக்குழிக்கு

வாசல் கிடையாது.

எந்த வழியிலும்

சாவு நுழையும்.

ஐம்பொறிகளையும்

மூடவேண்டும்.

எப்படி?

"கையது கொண்டு

மெய்யது பொத்தி

காலது கொண்டு

மேலது தழுவி"*

கடல் கடந்த நண்பர்களே,

நானிருக்கும் நிலையில்

உங்களுக்குத் தூதனுப்ப

வெண்கால் நாரையையா

செங்கால் நாரையையா

இந்த நேரத்தில்

எதை நான் தேட?

மூச்சு முட்டுகிறது.

___________________________________

* சத்தி முத்துப் புலவரின் செய்யுள் அடிகள்.

--------------------------------------------------------------------------------

16. பிரான்ஸ்

பனிப்புகாரில் பகல் உறையும்.

இலை உதிர்ந்த மரமெல்லாம்

பனிபடிய அழகுறும்-

தலை நரைத்த அம்மாக்களைப்போல்.

வானம் உதிர்க்கும் வெண்நுரைப்பூக்கள்

நிலம் மூடும்;

நிலம் மூடும் பனிப்படலம்

இருள் விழுங்கும்,

வெண்மை சிந்தும்;

என் அணுக்குள் குடையும்.

குளிர்நுழைய

ஆடைக்குள்...போர்வைக்குள்

உடல் ஒடுங்கும்

இதுவும் சிறைதான்.

கறுப்பு....வெள்ளை....சிவப்பு...செம்மஞ்சள்

காணும் முகங்களில் பல வண்ணங்கள்

நட்பு சுடரும்;

கறுப்பு--வெள்ளை இல்லா

நம்மவர் முகங்களில்

பூநாகம் நெளியும்;

அந்நியம் தோன்றும்.

வெற்றுடம்பும்...வியர்வைக் கரைசலும்

கொடிய பசியிலும்...சிநேக மனிதரும்

இவைதான்-இவைதான்.

நமது இருப்பிடம்-

சுதந்திரம் விரியும்.

எரிக்கும் வெயிலில்-

விளையும் உப்பு...

நம் பூமியில் படியும்

வெண்நுரைப் பூக்கள்.

பிரான்ஸ்: 20/2/1991

---------------------------------------------------------------------------